ஆஃப் ரோடிங் அட்வெஞ்சர்ஸ்!
சமீபத்தில், கல்பாக்கத்துக்கு அருகே ஒரு சாகசம் நடைபெற்றது. அதை நிகழ்த்திய பயணக் குழுவின் ஓர் அங்கத்தினராக நாமும் பயணித்தோம். ஃபோர்டு எண்டேவர், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, ரெனோ டஸ்டர், மாருதி ஜிப்ஸி, ஜீப் ஆகிய இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சாகசங்கள் செய்த இடம்: மதுராந்தகத்துக்கும் கல்பாக்கத்துக்கும் இடையே இருக்கும் ஜமீன் எண்டத்தூர் என்ற 'அட்வெஞ்சர் ஸோன்’.
சாகசங்கள் செய்யவே உருவாக்கப்பட்டத்தைப் போல குன்றுகள், மேடுகள், சேறு என அமைந்திருக்கிறது அந்தப் பகுதி.
கடந்த எட்டு ஆண்டுகளாக, 'சென்னை ஜீப் த்ரில் டெரா டைகர்’ என்ற அட்வெஞ்சர் பயண அமைப்பை நடத்திவருகிறார் அர்க்காதத். சேற்றில் தத்தளித்த ரெனோ டஸ்ட்டரை, ஜீப்பில் கட்டி வெளியேற உதவிவிட்டு வந்தவரிடம் பேசினோம்.
''இந்த அமைப்பை 2005-ல் ஆரம்பிக்கும்போது மூன்று பேர்தான் உறுப்பினர்கள். இப்போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் இருக்கிறார்கள். சாகசம் என்ற பெயரில் பொழுதுபோக்குக்காக மட்டும் இதைச் செய்வதில்லை. சாலையே இல்லாத இடங்களில் ஒருவர் தனது வாகனத்தை எப்படி எல்லாம் ஓட்ட முடியும் என்பதை, முழுமையாகக் கற்றுத்தருகிறோம்' என்றவர், தங்கள் குழுவோடு ஒருவர் எப்படிக் கலந்துகொள்வது, எங்கெல்லாம் இப்படி சாகசப் பயணம் செல்கிறோம் என்பதையும் கூறினார்.
''விடுமுறை நாட்களில்தான் அட்வெஞ்சர் பயணம் நடக்கும். அமைப்பில் இருக்கும் முக்கியமானவர்கள் சேர்ந்து எந்த தேதியில் வைத்துக் கொள்ளலாம் என முடிவு எடுப்போம். பிறகு, அதை போன், ஃபேஸ்புக், இமெயில் மூலமாக எல்லாருக்கும் தெரியப்படுத்துவோம். சென்னை அருகே இரண்டு இடங்கள் இருக்கின்றன. கேளம்பாக்கம் அருகே உள்ள மலைப் பகுதியும், இந்த ஜமீன் எண்டத்தூரும் அட்வெஞ்சர் பயணத்துக்கு ஏற்றவை. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் மூன்று நாட்கள் ஸ்பெஷல் அட்வெஞ்சர் டிரைவ் நடத்துகிறோம். இதன் பெயர் 'பாலாறு சேலஞ்ச்.’ இதற்கு, வெளி மாநிலங்களில் இருந்துகூட பலர் வருகிறார்கள். செங்கல்பட்டு அருகே பாலாற்றில் இறங்கி, மரக்காணம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மேலே ஏற வேண்டும். நீண்ட இந்த மணல் நதிப் பாதையில் சவால்கள் அதிகம். சவால் இருந்தால்தானே த்ரில் இருக்கும்?'' என்று புருவங்கள் உயரக் கேட்டார் அர்க்காதத்.
இந்த அட்வெஞ்சர் பயணத்துக்கு முதன்முறையாக வந்த அனந்தகிருஷ்ணன், ''பொதுவாக, பைக் ஓட்டுபவர்களுக்கு புல்லட் மீது ஆசை இருக்கும். அதுபோல, கார் ஓட்டும் எனக்கு ஜீப் மிகவும் பிடிக்கும். நீண்ட நாள் ஜீப் ஆசை ஆறு மாதங்களுக்கு முன்புதான் நிறைவேறியது. ஜீப் வாங்கிவிட்டு சாலையில் மட்டுமே ஓட்டிக்கொண்டு இருக்க முடியுமா? அதுதான் ஆஃப் ரோடில் ஓட்டிப் பார்க்க வந்திருக்கிறேன்!'' என்று சொல்லிவிட்டு உற்சாகமாக தனது ஜீப்பில் நிலத்தை உழுதுகொண்டே புறப்பட்டார்!
அந்த இன்பத்தை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.
செ.திலீபன்
