Tuesday, 17 December 2013

களை கட்டுது... சீஸன் எட்டு !
ரேவதி, படங்கள்: செ.திலீபன்
  டிசம்பர் மாதம்... சென்னையில் இசைக் காலம்! இந்த சீஸனில், திருவையாறையே, சென்னைக்கு அழைத்து வந்து, காமராஜர் அரங்கில், அமர வைத்து கடந்த எட்டு ஆண்டுகளாக 'சென்னையில் திருவையாறு’ என்று அசத்தி வரு கிறார்... 'லஷ்மன் ஸ்ருதி’ ஆர்க்கெஸ்ட்ரா நிறுவனர் லஷ்மணன்! சென்னை மாநகரில் இருக்கும் ஒவ்வொரு சபாவிலும் ஒவ்வொரு விதமான இசை  வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்க... மூத்த தலைமுறையோடு, இளைய தலைமுறையும் சங்கமிக்க வைப்பதுதான் 'சென்னையில் திருவையாறு' ஸ்பெஷல்!
''அந்தக் காலத்தில் கர்னாடக சங்கீத கச்சேரி என்றாலே, பெரியவர்கள்தான் ரசித்து வந்தனர். இன்று குழந்தைகளும் இளைய தலைமுறையினரும் கச்சேரிகளுக்கு அதிகமாக வருவது சந்தோஷத்தைத் தருகிறது. காரணம், பாட்டு, நடனம், கதாகாலட்சேபம், உபன்யாசம், சிதார் என நிகழ்ச்சியை கலகலப்பூட்டுவதுதான். மேலும், கண்களைக் கவரும் விதத்தில் மேடையை மெருகூட்ட, வித்தியாசமான பேக்கிரவுண்ட், நேர்த்தியான அலங்காரம், சவுண்ட் செட்டிங், மணம் வீசும் சூழல், 'எல்.இ.டி. ஸ்க்ரீன்’ என மெனக்கெடுவதுடன் நாவுக்கு விருந்தாக உணவுத் திருவிழாவும் இணைந்திருப்பதால் கச்சேரி களைகட்டுகிறது'' என்று குஷியோடு சொல்லும் லஷ்மணன்,
''ஒவ்வொரு வருடமும் 500-க்கும் மேல் விண்ணப்பங்கள் வந்தாலும், தகுதியின் அடிப்படையில் புதிதாக 14 பேருக்கு வாய்ப்பு கொடுக்கிறோம். இசை மேதைகளான உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ, சௌம்யா போன்ற பிரபலங்கள் தொடர்ந்து 8 வருடங்களாக இதில் பாடி பெருமை சேர்த்துள்ளனர்'' என்றார் உற்சாகமாக!
இதோ... டிசம்பர் 18 முதல் 25-ம் தேதி வரை நடக்க இருக்கும் 'சீஸன் எட்டு’க்கான  'சென்னையில் திருவையாறு’ கச்சேரிகளை... இந்த வருடம் கலகலப்பாக்க வரும் புதுவரவுப் பெண்களின் இசை வார்த்தைகள் இங்கே..!

பூஜா முருகன் (பரதம்): ''நான் வித்யாமந்திர் பள்ளியில ப்ளஸ் ஒன் படிக்கிறேன். பத்து வருடங்களா நீரஜா ஸ்ரீநிவாசன்தான் என் குரு. நிறைய மேடைகளில் ஆடியிருந்தாலும்... காமராஜர் அரங்கத்துல ஆடப் போறதை நினைச்சா, பெருமையா இருக்கு. தினமும் ரெண்டு மணி நேரம் பிராக்டீஸ் பண்ணுவேன். நேரம் கிடைக்கறப்பல்லாம் பேட்மின்டன், பேஸ்கட் பால் விளையாடுவேன். நிறைய ஓவியப் போட்டிகளிலும் பரிசுகள் வாங்கியிருக்கேன். பாட்டு கிளாஸும் போயிருக்கேன். ஆனா, பரதம்தான் எனக்கு முழு மூச்சு. இந்தக் கச்சேரியில ஆடறதுக்கு  பெருமாள் பாடல்களா தேர்ந்தெடுத்திருக்கேன். நிச்சயம் எல்லாரும் ரசிப்பாங்க!''

சாஸ்வதி பிரபு (பாட்டு): ''நான் எம்.எஸ்சி சைக்காலஜி கிராஜுவேட். சங்கீதத்துல லால்குடி ஜெயராமன் சார்தான் என் குரு. நானே கம்போஸ் பண்ணி, சில ஆல்பங்கள் வந்திருக்கு. அப்புறம்.... சூப்பரா சமைப்பேன்! கர்னாடக சங்கீதத்தை அதன் அழகு மாறாம பிரதிபலிக்கிற விதமா நிறைய நிரவல், ராகம், ஸ்வரம் போட்டு பக்தி மார்க்கத்துக்கு அழைச்சுட்டு போற மாதிரியான பாடல்கள், அம்பாள் பாடல்கள்னு தேர்ந்தெடுத்திருக்கேன் இந்தக் கச்சேரியில் பாடறதுக்கு. இப்ப இருக்கற தலைமுறைகிட்டயும் மார்க் வாங்கணும்னு ஆவலோட காத்திட்டு இருக்கேன்!''

சுகன்யா கவுர் (பரதம்): ''என் குரு... ஊர்மிளா சத்யநாராயணன். பரதத்தோட யோகா, உடற்பயிற்சி, கைடன்ஸ்னு அத்தனையையும் கத்துத் தருவாங்க. அப்பா பஞ்சாபி, அம்மா தமிழ். நான் ஆர்க்கிடெக்சர் மாணவி. டான்ஸ் கிளாஸ், யோகா, ஸ்விம்மிங்னு உடம்பை பத்திரமா பார்த்துக்குறேன். எப்போ எல்லாம் கச்சேரி வருதோ, அதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலயே ஜங்க் ஃபுட்ஸ், சாஃப்ட் டிரிங்ஸ் எதுவும் குடிக்காம, வீட்டுச் சாப்பாட்டை மட்டுமே சாப்பிடுவேன். நிறைய ஊர்களில் டான்ஸ் புரோகிராம் நடத்தியிருக்கேன். அதேபோல மத்தவங்களோட கச்சேரியையும் மிஸ் பண்ணிடாம பார்க்க நினைப்பேன். ஒவ்வொருத்தரோட நடனத்துலயும் ஏதாவது ஒண்ணு ஸ்பெஷலா இருக்குமே?! 'கீப் லேர்னிங் அண்ட் கீப் ஆன் லேர்னிங்'தான் என் பாலிஸி!''

ராகினிஸ்ரீ (பாட்டு): ''இங்க பாடற வாய்ப்புக் கிடைச்சது... என் பாக்கியம். கச்சேரியில் பாட தமிழ்ப் பாடல்களா தேர்ந்தெடுத்திருக்கேன். 'அர்த்தம் புரிஞ்சு பாடறப்ப, பாடறவங்களுக்கும் சரி... கேட்கறவங்களுக்கும் சரி... ஒருவித திருப்தி இருக்கும்’னு என் குரு, கலைமாமணி ஸ்ரீவசந்த்குமார் சார் சொல்லியிருக்கார். பி.ஏ.சோஷியாலஜி முடிச்சுருக்கும் நான்... வெஸ்டர்ன், லைட் மியூஸிக், கர்னாடக சங்கீதம், தமிழ்ப் பாடல்கள்னு இசையில் என்னவெல்லாம் இருக்கோ.... அத்தனையையும் கத்துக்கிட் டிருக்கேன். நிறைய கச்சேரிகளும் பண்ணியிருக்கேன். பியானோ கூட வாசிப்பேன். நான் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும்கூட. குரலை வெச்சு என்னவெல்லாம் சாதிக்க முடியுமோ, அத்தனையும் கத்துக்கிட்டு அசத்தணும்!''

அவள் விகடன் / 28 Aug, 2012

மாறணும்...சீரியல் டைரக்டர்ஸ் எல்லாரும் மாறணும் !
செ.திலீபன் படங்கள்: ப.சரவணகுமார்
'எதில் இருந்து எல்லாம் விடுதலை வேணும்னு நினைக்கிறீங்க..?’னு சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா, பி.எஸ்சி., விஸ்காம் படிக்கிற கேர்ள்ஸ்கிட்ட ஜாலியா ஒரு கேள்வியைப் போட்டா, கிரேஸியா கொட்டுது பதில்கள்!
ஸ்ரீநிதி: ''கேர்ள்ஸ் மொபைலுக்கு மெசேஜோ, காலோ வந்தா, வீட்டுல இருக்கறவங்க எல்லாரும் திடீர் உளவுத்துறை அதிகாரிகளா மாறிடறாங்க. பால்கனி, மொட்டை மாடினு அந்தப் பொண்ணு மொபைலை எடுத்துட்டு எங்க போனாலும், 'செடிக்கு தண்ணி ஊத்த வந்தோம்...’, 'துணி எடுக்க வந்தோம்...’னு வீட்டுக்குள்ளயே அவளை ஃபாலோ செய்து ஸ்பை பண்ணுற வன்முறையில் இருந்து எங்களுக்கு விடுதலை வேணும்! நம்புங்கப்பா... நாங்க நல்ல பொண்ணுங்க!''


சௌமியா: ''எங்க அப்பா வெளிய இருக்கும்போது அம்மா போன் பண்ணி, 'என்னங்க... இன்னிக்கு சாம்பார் வைக்கவா, இல்ல ரசம் வைக்கவா..?’னு கேட்பாங்க. எங்க அப்பா, 'நீ எது வேணாலும் வைம்மா... நான் வந்து அதுக்குப் பேரு வெச்சுக்குறேன்!’னு சொல்வாரு. யெஸ்... எங்கம்மா சாப்பாட்டுல இருந்து எங்களுக்கு விடுதலை வேணும். சாம்பார், கூட்டு, பொரியல்னு போரடிக்கிற இந்த மம்மீஸை எல்லாம், 'கான்டினென்டல் குக்கிங் கிளாஸு’க்கு அனுப்ப யாராச்சும் ஸ்பான்ஸர் பண்ணினா நல்லாயிருக்கும்!''
ப்ரியா: ''நான் கேட்கப்போறது நாட்டு நல்லதுக்காக. டி.வி. சீரியல்கள்ல இருந்து தமிழ்நாட்டுக்கு விடுதலை வேணும். எப்ப பார்த்தாலும் 'ரொம்ம்ம்ம்ப நல்லவன்’ ஹீரோ, அழுதழுது சீரியலை நகர்த்துற தியாகச் சுடர் ஹீரோயின், வில்லி மாமியார், போரடிக்கிற ஒரு லவ் டிராக்னு டிஜிட்டலா மொக்கை போடுறாங்க. மாறணும்... சீரியல் டைரக்டர்ஸ் எல்லாரும் மாறணும்!''


ரோஸ்னி: ''ஸ்கூல் பசங்களுக்கே 3 செமஸ்டர் பேட்டர்ன் வந்தாச்சு. ஸ்கூல் பேக் சுமை குறைஞ்சுருக்கு. ஆனா... கலேஜ் படிக்கிற எங்களுக்கு இன்னும் இந்த பில்லோ சைஸ் புக்ஸ்ல இருந்து விடுதலை கிடைக்கல. யுனிவர்ஸிட்டீஸ் எல்லாம் 'டெக்கி’யா மாறணும். காலேஜ் ஸ்டூடன்ட்ஸுக்கு இ-புக்ஸ் கொண்டு வரணும். புரஃபஸர்ஸ் எல்லாம் பவர்பாயின்ட்லதான் பாடம் நடத்தணும். ஸ்டூடன்ட்ஸ் எல்லாரும் மொபைல்லயே நோட்ஸ் எடுக்கணும். சூப்பர்ல?!''
ராஜி: ''ஆனா... ஊனா... 'சில கல்லூரிப் பெண்களிடம் கேட்டபோது...’னு பேனா, மைக் எடுத்துட்டு வர்ற மீடியாகிட்ட இருந்து விடுதலை வேணும் (ஆகா... இன்னிக்கு மீடியாவுக்கு நேரம் சரியில்ல போலிருக்கு). கருத்து சொல்ல நாட்டுல எத்தனையோ நல்லவங்க இருக்காங்கப்பா. போய் புள்ள குட்டிகளப் படிக்க வைங்க!''




ஆனந்த விகடன் / 03 Jul, 2013 /

பச்சைப் பலன் அறுவடை ஆகுமா?
செ.திலீபன், வ.விஷ்ணு
பச்சைக் கட்டடம், பச்சை போர்டு, பச்சை பேனர்களுடன் வரவேற்கிறது பச்சைக் காய் கறிகள் விற்கும் தமிழக அரசின் 'பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை’!
அம்மா உணவகத்துக்குக் கிடைத்த அதே ராஜ கம்பீர வரவேற்பு இந்தக் கடைகளுக்கும் கிடைத்துள்ளது. இந்த அங்காடிகள் தொடங்கிய முதல் நாளன்று காலை 7 மணியிலிருந்தே வாடிக்கையாளர்கள் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் தேனாம்பேட்டை காமதேனுவில் பென்ஸ் காரில் வந்திறங்கி, காய்கறி வாங்கிச் சென்றார் ஒருவர்.  தமிழக அரசின் காமதேனு அங்காடிகளில் கிடைத்த இடங்களில் காய்கறிகள் பரப்பி வைக்கப்பட, வருபவர்கள் ஒரு கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு விலைப் பட்டியலை ஒரு நோட்டம் விட்டுக்கொண்டு, 'நீ முந்தி... நான் முந்தி’ என்று காய்கறகளை அள்ளிச் சென்றார்கள்.
பன்னிரண்டு வகையான காய்கறிகள் விற்பனைக்கு இருந்தன. அனைத்துக் காய்கறிகளும் அடங்கிய '100 ரூபாய் காம்போ’ பையும் உண்டு. தன் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு காய்கறிகளைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த இல்லத்தரசி ஒருவர், 'வெங்காயம், தக்காளி மாதிரியான காய்கறிலாம் சீப்பா இருக்கு. ஆனா, சில காய்கறிகள் மாம்பலம் காய்கறி மார்க்கெட்ல இன்னும் சீப்பா இருக்கும்!'' என்று பாராட்டவும் செய்யாமல், திட்டவும் இல்லாமல் ஒரு மாதிரி கருத்து சொன்னார்.
காய்கறிகளை வாங்க நாள் முழுக்க காமதேனு  அங்காடிகளில் மக்கள் வரத்து இருந்துகொண்டே இருக்க, பல அங்காடிகளின் அருகிலேயே திடீர் கேன்டீன்கள் முளைத்தன. ஆக, பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகளுக்கு அருகிலேயே 'அம்மா மெஸ்’ஸுக்கும் பிசினஸ் இருக்கிறது ஆபீஸர்ஸ்! முதல் நாளன்று காய்கறிகள் சீக்கிரம் தீர்ந்துவிட்ட குறையை இரண்டாம் நாள் போக்கிவிட்டனர் அதிகாரிகள். வெங்காயம், தக்காளிகளை டெம்போவிலிருந்து லோடு லோடாக மதியம் வரை இறக்கிக்கொண்டிருந்தார்கள்.  
பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையின் முக்கியமான அம்சம், வாங்கிய காய்கறிகளை எலெக்ட்ரானிக் தராசில் எடைபோட்டு, முறையாக ரசீது தருகிறார்கள். ஆனால், கட்டணம் செலுத்துமிடத்தில் அவ்வளவு கூட்டம் அம்முகிறது!
முதல் வாரத்தில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் 'ஓஹோ’ வரவேற்பு பெற்றிருக்கிறது பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள். அடுத்தடுத்த மாதங்களும் இதே ஜரூரைத் தக்கவைத்தால், 'பச்சை’க் காய்கறிகள் பலனை நிச்சயம் அறுவடை செய்வார் ஜெயலலிதா!

COMMENT(S): 30


இடைத்தரகர்களின் கொட்டத்தை அடக்கி, விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை விளைவிக்கும் அருமையான திட்டம் இது. உழவர் சந்தையில் உள்ளூர் அரசியல்வாதிகளின் கொட்டத்தினால் விவசாயிகள் பல பிரச்சினையை சந்திக்கின்றனர். இந்த திட்டம் அதனால் உழவர் சந்தையை விட மேலானது. பல விஷயங்களை அரசே ஏற்று நடத்துவது என்பது கடினமானது. இங்கே அபுதாபியில் சில அத்தியாவசிய பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்து அந்த பொருட்கள் தனியார் கடைகளாகட்டும்..பெரிய சூப்பர் மார்க்கெட் ஆகட்டும்..எல்லா இடங்களிலும் ஒரே விலைக்குதான் விற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. விலை பட்டியலும் போடப்பட்டிருக்கும். அதுவும் ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் இந்த பொருட்களின் பட்டியல் இன்னும் நீளமாகும். இதன் மூலம் பதுக்கல், தேவை அதிகரிக்கும்போது விலை அதிகரிப்பு போன்றவை தடுக்க படுகிறது. இது போன்ற ஒரு முறையை தமிழகத்திலும் முதல்வர் செயல்படுத்தி பார்க்கலாம். கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை வாங்கி, தனியார் வியாபாரிகள் அங்கிருந்துதான் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டுமென்றும், இத்தனை சதவிகித லாபம்தான் வைக்கலாமென்றும் கட்டுப்பாடு கொண்டு வந்தால் விலைவாசி கட்டுக்குள் இருக்கும். முயற்சி செய்து பார்க்கலாமே!

India is coming out of Price Control mode.
Several medicines are no more in price control list - now you want Vegetables in price control list? Tell that to Central Govt.

நல்ல யோசனை. யாராவது முதலமைச்சரிடமும் அதிகாரிகளிடமும் தெரிவியுங்களேன். ஆ. விகடனே இந்த நல்ல காரியத்தை செய்யலாம்.

உழவர் சந்தை என்று கருணா தொடங்கினரே, என்னாச்சு ?

பென்ஸ் காரில் வந்தவர் நிச்சசம் கூலிக்கு வேலை பார்க்கும் ஓட்டியாகத்தான் இருப்பார் .

வெங்காயம், தக்காளி மாதிரியான காய்கறிலாம் சீப்பா இருக்கு

எனக்குத் தெரிந்து வாழை தான் சீப்பா இருக்கும் வெங்காயமுமா?

(முருகன்)

மு.க கொண்டுவந்த உழவர் சந்தையை "ரீமேக்" செய்திருக்கிறார். இதை முன்னரே செய்திருக்கலாம். இதில் குறைகள் ஏதாவது இருந்தால் அதை சரி செய்து தொடரவேண்டும்.

சத்தான ஆகாரத்திற்கு இந்த திட்டம் நன்கு உதவும்...

ஒரு பக்கம் சத்தான ஆகாரத்திற்கு பசுமை காய்கறி கடைகள்....

இன்னொரு பக்கம் குடலை அழுக செய்து, ஈரலை வறுத்து கெடுத்து, இதயத்திற்கு குருதி போகும் பாதையை அடைத்து, மூளையை குழைத்து, பல பத்தினி தங்கைகளை விதவையாகும் டாஸ்மார்க் வேறு...

ஜெயலலிதா அம்மா, நீங்க நல்லவரா?? கெட்டவரா???

பென்ஸ் காரில் வந்திறங்கி, காய்கறி வாங்கிச் சென்றார் ஒருவர்

பாவம் ஏழை.

"அதிலும் தேனாம்பேட்டை காமதேனுவில் பென்ஸ் காரில் வந்திறங்கி, காய்கறி வாங்கிச் சென்றார் ஒருவர்" - இன்னைக்கு தமிழ் நாட்டுல பென்ஸ் கார் வாங்கறது ஈசி ... ஆனா கறிகாய் வாங்கமுடியாது.. இன்னும் இருக்குடீயூ ... வைட் பண்ணுங்க..

அம்மா காய்கறிகடை மற்ற ஊர்களுக்கு கிடையாதா?.இதுவும் உழவர்சந்தையை போல ஆகாமல் இருக்க வேண்டும்.....

நல்ல திட்டம். ஆனால் ஊழலர்கள் நல்லவர்கள் இல்லையே. (ப்ளாஸ்டிக் பைகளை தவிர்க்க இயலாதா?)

அம்மா மெஸ் ... அம்மா காய் கரி கடை... அம்மா ஆட்டோ... அம்மா பஸ்... அம்மா மலிவுவிலை மது.... அம்மா மலிவு விலை பெட்ரோல் பங்க் ... அம்மா மலிவு கட்டண பொறியில் கல்லூரி....அம்மா கட்டணமில்லா மருத்துவ கல்லூரி... அம்மா டோல் கேட் இல்லாத நெடுஞ்சாலை ...அம்மா மலிவு விலை மளிகை கடை ...அம்மா மலிவு விலை poti கடை ...அம்மா மலிவு கட்டண விவசாய கூலி ...அம்மா மலிவு விலை கார் பைக் ஷோ ரூம்... ஹ்ம்ம்ம்ம்ம்ம் யார் அங்கே... ஆகட்டும் சீக்கிரம்.....ஆரமியுங்கள் ....எல்லாம்.... தமிழ்நாடு ...அம்மா நாடாகட்டும் ...!!!????

ஊழல் இல்லாமல் நல்லது நடந்தால் சரிதான்

அம்மா டாஸ்மாக் பார்ல ஒரு டம்பளர் 5 ரூபா வாட்டர் பாக்கெட் 5 ரூபா ...... கொஞ்சம் மலிவு விலை பார் கொண்டு வாங்கம்மா .....

இது எவ்வளவு நாளைக்கு நடக்கும் ?. அரசாங்கம் எல்லாவற்றையும் செயயா முடியாது..கம்னிஸ்டுகள் இப்படித்தான் எல்லவற்றயிம் அரசுடமை ஆக்கி , மக்களுக்கு சாப்பாட்டு இல்லாமல் செய்து விட்டார்கள். அதனால்தான் கம்னிஸம் அழிந்தது. அரசு அலுவலங்ககள் எப்படி இருக்கிறது என்று பார்திருகிரீர்களா?. உடைந்துபோன சேர், வெள்ளை அடிக்காதகட்டிடம், பாராமரிப்பு இல்லா சூழல் ... இது தான் அரசாங்கம். எங்கும் துர்நாற்றம் , எங்கும் மலம் ஜாலம் கழிக்கும் இடம் தான் அரசாங்க அலுவலங்கள்.

ரிலையன்ஸ், மோர் போன்ற கடைகளில் சின்ன வெங்காயம் ரூ.120.இஞ்சி ரூ.200 ஆனால் இந்தப் புதுக் கடைகளில் பதிக்குப் பாதி விலையில் இவை கிடைப்பது வரவேற்கத் தக்கதே.

உழவர் சந்தை முன்னோடியான நல்ல திட்டம் ..... ஆனால் அதிகாரிகளாலும், இடைத்தரகர்களாலும் பல இடங்களில் இந்தத் திட்டம் தவித்தது . மேலும் பல உழவர்கள் நேரடியாக கடையில் அமர்ந்து வியாபாரம் செய்ய சிரமப்பட்டனர். அதனால் பெரும்பாலான இடங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கமே விளையாடியது. இப்போதையத் திட்டத்தில் நேரடிக் கொள்முதல் அதை தவிர்த்துள்ளது. ஆனால் அதிகாரிகளும் ஊழியர்களும் சொதப்பாமல் இருந்தால் திட்டம் வெற்றி அடையும். போகப் போகப் பார்ப்போம். கைக்கும் வாய்க்கும் போதாமல் கஷ்டப்படும் கீழ்த்தட்டு, நடுத்தட்டு மக்களுக்கான இத்திட்டங்களில் இந்த பென்ஸ் கார் பார்ட்டிகள் எல்லாம் விலகியிருத்தல் நலம். #

அம்மாவின் திட்டம் நல்லம் திட்டம் தான், ஆனால் அதிகாரிகள் சொதப்பாமல் இருக்க வேண்டுமே. சொதப்பாமல் தொடர்வார்களா?

விலைவாசியைக் கட்டுப்பாட்டை மீறி எகிற வைத்துவிட்டு, இப்படி குறைந்தவிலைக்கடைகளாய்த் திறப்பது என்பது இப்போதைக்கு "ஓ.கே". ஆனால் தொலைநோக்குப் பார்வையில் சரிதானா???